கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற நான்கு வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 05 மாத கைக்குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவெரிய – ஒஹிய பிரதேசத்தில் நேற்று வேன் ஒன்று 100 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்ததில் 05 மாத கைக்குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

உடவேரியவில் இருந்து ஒஹிய புகையிரத நிலையம் நோக்கி பயணித்த வேன் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஹப்புத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரத்தினகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மின்கம்பத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

விலத்தவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், நேற்று இரவு பம்பலப்பிட்டியில் வஜிர வீதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காலியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நேற்று அத்திகலையில் இருந்து மீகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 73 வயதுடைய பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.