மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மோதி சுமார் 15 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்ட யானை

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஹபரன கல்ஓயா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த புலத்திசி கடுகதி ரயில் மோதுண்டு குறித்த யானை உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன.

குறித்த விபத்து காரணமாக கிழக்கு மாகாணத்துக்கான ரயில் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த  காட்டு யானை மோதியதில் ரயிலின் முன் என்ஜின் பகுதி தடம் புரண்டுள்ளதுடன், ரயிலில் மோதி குறித்த யானை சுமார் 15 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை எதிர்கொண்ட காட்டு யானை ரயிலின் முன் என்ஜினில் சிக்கியுள்ளது

எனினும், விபத்தினால் ரயிலில்பயணித்தவர்களுக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை எனவும், ரயிலில் பயணித்தவர்களை ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் பேரூந்துகள் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரயில் பாதையில் உள்ள 10 கொன்கிரீட் ஸ்லீப்பர்களும் உடைந்துள்ளன.