
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத எஞ்சின் திடீரென தீப்பற்றியது!
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்), நேற்று புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
தூரப்பகுதிகளில் இருந்து, திருகோணமலை புகையிரத நிலையத்திற்கு வரும் புகையிரதங்களை நிலைய எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரம், நேற்று மதியம் கொழும்பிலிருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் புகையிரத இயந்திரம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
