சுவிட்சர்லாந்தில் காரின் மீது கனரக வாகனம் விழுந்து விபத்து!
சுவிட்சர்லாந்தின் நியூன்ஹோஃப் பகுதியில் மோட்டார்வே பாலத்தின் கீழுள்ள வீதியில் கனரக வாகனம் ஒன்று காரொன்றின் மீது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கிரேன் ஒன்றை ஏற்றிக்கொண்டு குறித்த பாலத்தினூடாக கனரக வாகனம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை கிரேன் பாலத்தில் மோதியதால் கனரக வாகனம் இடது பக்கமாக குடைசாய்ந்தது.
அதேவேளை எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சாம்பல் நிற பி எம் டபிள்யூ (BMW) காரின் முன்பகுதியில் கனரக வாகனம் விழுந்தது.
அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு காரில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
காரின் சாரதியான 29 வயது நபர் மற்றும் காரின் முன்புறம் அமர்ந்திருந்த 29 வயதுடைய மற்றுமொரு நபர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். காரின் பின்புறம் இருந்த குழந்தைகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனரக வாகனத்தின் 60 வயதான சாரதி காயங்களின்றி மீட்கப்பட்டார்
இந்த சம்பவத்தால் ஆயிரக்கணக்கான பிராங்குகள் பெறுமதியான சொத்து சேதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கினறனர்.
கிரேன் எவ்வாறு பாலத்தின் மீது மோதியது என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கனரக வாகனத்தின் சாரதி மீது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவரது ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்