
நரியாக மாறிய நாய் : நள்ளிரவில் நிகழ்ந்த நகைச்சுவை
வீட்டில் கட்டி வைத்திருந்த நாய் நரியாக மாறி ஊளையிட்ட சம்பவம் பசறையில் இடம்பெற்றுள்ளது.
மரம் வெட்டும் வேலை செய்யும் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேலை முடித்துவிட்டு பசறை நகர் பகுதியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
இருவரும் பசறை நகருக்கு சென்று மது அருந்திவிட்டு முச்சக்கரவண்யொன்றில் தமது வீடு நோக்கி சென்றுள்ளனர். அந்நேரம் வீதியில் அழகிய நாயொன்று தனியாக நின்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் கீழே இறங்கி அந்த நாயை பிடித்து அன்போடு தடவி தம்மோடு அழைத்து சென்றுள்ளனர்.
இதன்பின் குறித்த இருவரில் ஒருவர் குறித்த நாயை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் அவர் அந்த நாயை சங்கிலி ஒன்றினால் கட்டி வைத்து விட்டு அதற்கு உணவு அளித்துள்ளார். எனினும் அது உணவை உண்ணவில்லை. அதன்பின் அவர் மீன் எடுத்து வந்து நாயிற்கு கொடுத்துள்ளார். உடனே நாய் அதை உண்டது.
பின்னர் குறித்த நபர் மதுபோதை காரணமான அயர்ந்து உறங்கிவிட்டார்.
இந்நிலையில் நள்ளிரவு 1.00 மணியளவில் நரி ஊளையிடும் சத்தம் அப்பகுதியில் கேட்டுள்ளது.
உடனே அக்கம் பக்கத்து மக்கள் பயந்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். நாயை அழைத்து வந்த குறித்த நபரும் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார்.
அப்போது தான் அவருக்கு தெரிந்துள்ளது தான் வீதியிலிருந்து அழைத்து வந்தது நாய் அல்ல நரி என்று.
அதன்பின் உடனே தான் நாய் என நினைத்து கட்டி வைத்திருந்த நரியை அவிழ்த்துவிட்டு துரத்தியுள்ளார். எனினும் அது போகாமல் அங்கேயே நின்றுள்ளது. பயந்து போன குறித்த நபர் தடியை கொண்டு நரியை அடித்து துரத்தியுள்ளார்.
இச்சம்பவம் அந்நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் பதற்றத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
