மட்டக்களப்பில் சிறிநேசன், அரியம், ஐயா இல்லாத கரிநாள் போராட்டம்..? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் , பா. அரியநேந்திரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதா? என விமர்சனங்கள் எழுந்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் செயலாளர் தெரிவை தொடர்ந்து தமிழரசுக்கட்சியினுள் குழப்பநிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து மட்டக்களப்பில் சிவில் சமூக அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியற்பரப்பிலிருந்து குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் மட்டு.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகிய இருவர் மாத்திரம் கலங்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வழமை போல் நேற்றும் பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவுகள் மட்டக்களப்பு அரசியல் பரப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுக்க திட்டமிடும் போது இவ்வாறான தடையுத்தரவுகள் வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல .

அவ்வாறு நீதிமன்ற தடையுத்தரவுகள் வழங்கப்பட்டாலும் கூட அதையும் மீறி தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட களத்தில் நிற்பது வழமை ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டம் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

செயலாளர் பதவி தகராறு காரணமாக மக்கள் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் அரியநேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் இன்று கலங்து கொள்ளவில்லை என சமூக ஊடகங்களில் பலர் தமது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் இவர்கள் பதவிக்காகதான் இதுவரையும் கலந்து கொண்டார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து இன்று எழுந்துள்ளது.