ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சஹ்ரான் சூத்திரதாரி : எஃப்.பி.ஐயின் (FBI ) சிறப்பு முகவர் தெரிவிப்பு ?
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்திய அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI), தாக்குதலின் மூளையாக சஹ்ரான் ஹாஷிம் இருப்பதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என, இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“தன்னையும் பலரையும் கொல்ல வெடிபொருளை” IED (Improvised Explosive Device) வெடிக்கச் செய்வதற்கு முன்பு சஹ்ரான் ஹாஷிம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் மற்றும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட தலைவர் என்று FBI சிறப்பு முகவர் மெர்ரிலி ஆர்.குட்வின், டிசம்பர் 11, 2020 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அடிக்கடி வரும் சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுக்கு உதவிய எஃப்.பி.ஐயின் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு விசாரணையின் விளைவாக இது அமைந்துள்ளது. இத்தாக்குதலில் 5 அமெரிக்க குடிமக்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உள்ளூர் பத்திரிகைகளுடன் பிரமாணப் (affidavit) பத்திரத்தின் நகலை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு , பகிர்ந்து கொண்டதால், இந்தப் பிரச்சினை மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.
அறிக்கையின்படி, சஹ்ரான் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் துணை அமைப்பாக செயல்பட ஒப்புதல் பெற்றிருந்தார்.
தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் உதவி கேட்டது. இதையடுத்து சில மணி நேரங்களுக்குள், இலங்கை அதிகாரிகளுக்கு உதவவும் விசாரணைகளை நடத்தவும் எஃப்.பி.ஐ இலங்கைக்கு பணியாளர்களை அனுப்பியது. எஃப்.பி.ஐ ஆதாரங்களைச் சேகரித்து செயலாக்கியது, தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களது சகாக்களை அடையாளம் கண்டது, காயமடைந்த அமெரிக்கர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததுடன் , இறந்த ஐந்து அமெரிக்க குடிமக்களின் சடலங்களையும் நாட்டிற்கு கொண்டு சென்றனர்.
எஃப்.பி.ஐ சிறப்பு முகவர் மெர்ரிலி ஆர்.குட்வின், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், இதை தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மீதான விசாரணைகளை நடத்துவதில் தனக்கு பரந்த அனுபவம் இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் குறித்த எனது பணிகளிலிருந்து, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் நிறுவன மற்றும் செயல்பாட்டு உத்திகள், அவர்கள் பயன்படுத்தும் அரபு சொற்கள் உட்பட, இஸ்லாமிய சித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நான் பல முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளேன். அந்தப் பணியில், குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களை சென்று பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்துள்ளேன், நேர்காணல்களை நடத்தியுள்ளேன், என்று அவர் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.