Last updated on January 4th, 2023 at 06:53 am

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் : 5 ஆவது நாள்

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் : 5 ஆவது நாள்

-அம்பாறை நிருபர்-

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 201 வது கொடியேற்று விழா இன்று புதன்கிழமை 5 ஆவது நாளை நிறைவு செய்கின்றது.

கடந்த சனிக்கிழமை மாலை  ஆரம்பமான கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் நிகழ்வானது கொடியேற்று தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு, கொடியிறக்கு தினமான எதிர்வரும் ஜனவரி  04 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது

கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் வஸீரா ரியாஸ், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம், கல்முனை செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், கல்முனை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர், கடற்படை பொறுப்பதிகாரி ரொசன் விஜயதாச, கல்முனை பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட்,  நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.