மாலைத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்
மாலைத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்றிடமிருந்து கையூட்டல் பெற்றமை மற்றும் பணச்சலவை குற்றத்துக்காக அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி யாமீன் மறுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்துல்லாஹ் யாமீன் தமது அதிகாரத்தை இழந்தார்.
2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலைதீவின் முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே, ஒரு பில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக, 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவரது தண்டனை விதிப்புக்கு பிறகு, யாமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்டதில் இருந்து, முன்னாள் சர்வாதிகாரி மௌமூன் அப்துல் கயூமின் ஒன்றுவிட்ட சகோதரரான யாமீன், மாலைதீவில் இந்திய செல்வாக்கிற்கு எதிரான பிரசாரத்துடன் தீவிர அரசியலுக்கு திரும்பினார்.
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யாமீனின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர். முகமது ஜமீல் அகமது தலைமையிலான வழக்கறிஞர் குழு,
குற்றவியல் நீதிமன்றத்தின் தண்டனையை தாமதமின்றி மேல்முறையீடு செய்வோம் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக, காஃப் அலிபு அட்டோல் வோடமுலா குத்தகை வழக்கில் யாமீனுக்கு 2019 ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, எனினும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.