மட்டக்களப்பில் குழந்தை பிறந்து 31 நாட்களில் தந்தை உயிரை மாய்ப்பு
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவிற்குடபட கோவில்போரதீவு பொறுகாமம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவில்போரதீவு பொறுகாமம் பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விநாயகமூர்த்தி சிறிவானுஜன் (31 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அண்மையில் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது கடைசி மகளை சிகிச்சைக்காக கொழும்பபு வைத்தியசாலைக்கு அவரது மனைவி கொண்டு சென்று வீடு திரும்பிய நிலையில், குறித்த நபர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், சம்ப தினத்தன்று அயலில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டில் தனிமையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், வெளியில் சென்ற அம்மம்மா வீடு சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் உத்தரவுக்கு அமைவாக, மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.