Last updated on January 4th, 2023 at 06:54 am

ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை : ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள் மீட்பு

ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை : ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள் மீட்பு

 

-அம்பாறை நிருபர்-

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு இரு வாகனங்கள் ஒரு சந்தேக நபர் 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன் 36 வயது சந்தேக நபரையும் நேற்று வியாழக்கிழமை  நள்ளிரவு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை, இந்த நடவடிக்கையின் போது தப்பி சென்ற சந்தேக நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் என இனங்காணப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் கல்முனை பகுதியில் சோதனை இடப்பட்டுள்ளன.

இதன் போது தப்பி சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என கல்முனை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை கார் ஒன்றிலிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.