முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அறிவித்தல்

பண்டிகைக் காலத்தில் கடைகளில் சோதனையிடப்பட்டாலும், முட்டை விலை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சில பிரதேசங்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு முட்டை 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ள நிலையில், முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சந்தையில் உள்ள ஏனைய பொருட்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.