போலி ஆவணங்களில் இலங்கை வர முயன்ற இரு பெண்கள் சென்னையில் கைது

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும், இலங்கைக்கான சுற்றுலா விசாவையும் தயாரித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அதிகாரிகள் அவர்களின் தரவுத்தளத்தை சரிபார்த்தபோது, கடவுச்சீட்டு போலியானது என்பதைக் கண்டறிந்து, பயணிகளை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தனர்.

விசாரணையில், அந்த பெண்கள் இலங்கை பிரஜைகள் என்பதும், சுற்றுலா விசாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் பெற ஏஜென்டுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

மேலும் விசாரணைக்காக சென்னை பொலிஸ் மத்திய குற்றப்பிரிவில் குறித்த பெண்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.