தினேஷ் ஷாப்டர் கொலை : பொலிஸார் வெளியிட்டுள்ள விசாரணை தகவல்கள்

பொரளை பொது மயானத்தில் காரில் கட்டி வைக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கைத்தொலைபேசியை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொரளை பொலிஸ் நிலைய  சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களும் அடங்குவதாக விசாரணைகளை முன்னெடுத்த உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் காரில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

உயிரிழந்த தினேஷ் ஷாப்டரிடம் இருந்து பெறப்பட்ட 144 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் தற்போது நிலவி வரும் தகராறு தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் தினேஷ் ஷாப்டர், தனது மனைவிடம், தனக்கு தர வேண்டிய பெரிய பணத்தொகை தொடர்பான சந்திப்பொன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அந்தத் தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு பிரையன் தாமஸின் வீட்டுக்குச் சென்று நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதேவேளை, பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த பணம் தொடர்பாக ஏற்கனவே கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் உயிரிழந்த ஷாப்டரின் பிரேத பரிசோதனையில் பிளாஸ்டிக் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதேவேளை, உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு ஹத்த -மல் வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.