மட்டக்களப்பில் 256 மாடுகள் உயிரிழப்பு : விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை

கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையினால் மாடுகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தி விவசாயிகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 256 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும்,  திருகோணமலை மாவட்டத்தில் 210 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும், அம்பாறை மாவட்டத்தில் 16 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், காலநிலை சீரற்று இருக்கும் நிலையில் கால்நடைகளை பாதுகாக்காமல் பொது இடங்களில் திரிய விட்ட விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், கால்நடைகளை இவ்வாறு வெளியே உலாவ விட்ட விவசாயிகளுக்கு எதிராக அபராதம் வசூலிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.