
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என தெரிவித்து 2.7 மில்லியன் கொள்ளை
2.7 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 41 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதிக்கு அருகில் காரில் சென்ற இருவரிடமிருந்து இப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் நேற்று பிற்பகல் டுப்ளிகேஷன் வீதியில் பயணித்த காரை நிறுத்தி தாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எனக் கூறி காரை சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது, சந்தேக நபர்கள் குறித்த காரின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்தவரிடமிருந்து 2.7 மில்லியன் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
