தடைப்பட்டுள்ள பேருந்து சேவையை தொடருமாறு கோரிக்கை

-கிளிநொச்சி நிருபர்-

2 வாரமாக தடைப்பட்டுள்ள பேருந்து சேவையை தொடருமாறு முட்கொம்பன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று புதன்கிழமை கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு சென்ற மக்கள் சிலர், சாலை அதிகாரிகளுடன் குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறித்த சேவை கடந்த 2 வாரமாக முன்னெடுக்கப்படாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை தொடர்பில் சாலை அதிகரிகளுடன் கலந்துரையாடினர்.

ஆயினும், ஆளணி உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைப்புக்கள் ஊடாக உயர் மட்டங்களிற்கு தெரியப்படுத்துமாறு சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.