இலங்கையில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் 4 வயது குழந்தை பராமரிப்பு இல்லத்தில்

காலி உனவடுன பகுதியில் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  தாயை இழந்த ரஸ்ய குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி உனவதுன பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் ரஸ்யப் பெண்ணும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் உயிரிழந்தனர்.

குறித்த ரஸ்யப் பெண், பணியின் நிமித்தம், 4 வயதுடைய தனது குழந்தையை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

பெலியத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின ரயிலே முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஸ்ய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டநிலையில், ரஸ்யாவில் இருந்து குழந்தையின் தந்தை  இன்று அல்லது நாளை இலங்கைக்கு வரவுள்ளார் என ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.