இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஏலக்காய்

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் புதிய ரக ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் புதிய ரகத்தை பயிரிட்டு அதிக அறுவடையினை பெற முடியும் என ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சரத்சந்திர தர்ம பராக்கிரம தெரிவித்துள்ளார்.

இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்தது, இந்நிலையில் இந்த புதிய ஏலக்காயை தாழ்நில ஈரமான பகுதிகளிலும் பயிரிடலாம்.

இதேவேளை, இலவங்கப்பட்டை (14.0%) மற்றும் மிளகு (4.37%) ஏற்றுமதியில் சிறந்த செயல்திறன் காரணமாக 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022 செப்டம்பர் மாதத்தில் வாசனைத்திரவியம், மசாலா மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் ஏற்றுமதி வருவாய் 9.29% அதிகரித்து 40.84 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஒன்பது மாதங்களில், வாசனைத்திரவியங்கள், தேயிலை, அலங்கார மீன்கள், இரத்தினங்கள், செறிவூட்டப்பட்ட வைரங்கள், எலக்ரோனிக் கூறுகள் உட்பட சரக்கு ஏற்றுமதி மூலம் இலங்கை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) செப்டம்பர் மாதத்திற்கான அதன் செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.