ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க வரலாறு

உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்து கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு மேல் வீரர்களின் கால்களில் பந்து உதைபடுகின்றது என்பது உலகமறிந்தது. இதற்கு மிகப்பெரிய உதராணம் 1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு கூடிய கூட்டம் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர்.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா முதல் முறையாக 1930ம் ஆண்டு உருகுவேயில் நடத்தப்பட்டது. 1904ம் ஆண்டு ஃபிஃபா என்று அழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளம் உருவாக்கப்பட்டு, 1908ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாட்டு பிரபலமடைய கால்பந்திற்கென தனியாக உலகக் கோப்பையை நடத்த ஃபிஃபா திட்டமிட்டு அதன்படி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது.

1942 மற்றும் 46ம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இரண்டு உலகக் கோப்பை தடைபட்டது. பிறகு பிரேசிலில் 1950ம் ஆண்டு மீண்டும் உலகக் கோப்பை போட்டிகள் களைகட்ட தொடங்கியது இந்த போட்டிகளை சுமார் 10லட்சம் பார்வையாளர்கள் கண்டுரசித்துள்ளனர்.

ஆரம்பத்தில் 13 அணிகள் மட்டுமே விளையாடிய உலகக் கோப்பை தொடரில் தற்போது 32 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆரம்பகட்டத்தில் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஆசிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வடக்கு மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன், ஓசோனியா, தென் அமெரிக்கா என ஆறு ஃபிஃபா கண்டங்களிலிருந்து தகுதி சுற்று மூலம் அணிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தற்போது வழங்கப்படும் உலகக் கோப்பை 1970ம் ஆண்டிற்கு பிறகு வடிவமைக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் உலகக் கோப்பையை தொடங்கிவைத்த முதல் ஃபிஃபா தலைவர் ஜூலியஸ் ரிமெட் நினைவாக அவர் பெயரிலேயே சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டுள்ளது. 1958, 62, 70 என மூன்று முறை பிரேசில் உலகக் கோப்பையை கைப்பற்றியதால் ஜூலியஸ் கோப்பை அவர்களுக்கு சொந்தமானதாக மாறியது இதனால் புதிய மாதிரி வடிவமைக்கப்பட்டு தங்கக் கோப்பையாக ஜொலிக்கிறது.

இதுவரை நடைபெற்ற 21 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் பிரேசில் ஐந்து முறையும், ஜெர்மனி நான்கு முறையும், இத்தாலி மூன்று முறையும் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளன. ஆசிய கண்டங்களின் தகுதி சுற்றில் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் இந்தியா இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட விளையாடியதே இல்லை என்பது சோகமான வரலாறாகும்.