இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இதுவரை 162 பேர் பலி

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று திங்கட்கிழமை 13:21 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கியுள்ளது.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருக்கும் ஏனையவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்புப் படையினர் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

நிலநடுக்கத்தில் சுமார் இதுவரை 326 பேர் காயமடைந்துள்ளதாகக் தெரிவித்துள்ளனர் “அவர்களில் பெரும்பாலோர் இடிபாடுகளில் சிக்குண்டதில் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரழிவால் 13,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 2,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை 100 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் அங்குள்ள உயரமான கட்டிடங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் பொதுவானவை, இது பசிபிக் பகுதியில் டெக்டோனிக் செயல்பாட்டின் “நெருப்பு வளையம்” பகுதியில் உள்ளது. 2018 சுலவேசி நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு, பேரழிவு தரும் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.