ரோகித் சர்மாவிடம் இருக்கும் டி20 கேப்டன் பதவியை பறிக்க முடிவு

இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 வது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அணி தைரியமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தோல்வி காரணமாக பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் அதிரடியாக சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

மேலும் இந்திய அணியில் பல மாற்றங்களை செய்யயும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அடுத்த 2024 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் முயற்சிலும் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து தொடருக்கு இந்திய டி20 அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமித்து அனுப்பியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் மூன்று வகையான போட்டிகளுக்கும் தற்போது இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை விராட் கோலி மூன்று வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டபோது பணி சுமையை குறைப்பதாக காரணம் காட்டி அவரிடம் இருந்து டி20 கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டதை போல , தற்போது ரோகித் சர்மாவிடன் இருக்கும் டி20 கேப்டன் பதவியை ஹார்திக் பாண்டியவிடம் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான் தேர்வு குழுவை பிசிசிஐ கலைத்துள்ள நிலையில் புதிய தேர்வு குழு தேர்தேடுக்கப்பட்டவுடன் டி20 அணிக்கு புதிய கேப்டனையும் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்திக் பாண்டிய கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய முதல் சீசனிலே கோப்பை வென்று கொடுத்தார். இதனால் டி20 அணிக்கு ஒரு ஆல்ரவுண்டர் கேப்டனாக நியமிக்கப்படுவது இந்திய அணிக்கு மேலும் ஒரு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்து வரும் டி20 உலககோப்பைக்கு இந்திய அணியை வலுவாக தயார் செய்ய உதவியா இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.