மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை

 

அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் – 2022, கொழும்பு பம்பலபிட்டிய இந்து கல்லூரியில் நடைபெற்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலக்கிய நாடக போட்டியில் போட்டியிட்ட  மட்டக்களப்பு  வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை முதலாம் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

குறித்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலபிட்டிய இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் இலக்கிய நாடக போட்டியில் எட்டு மாகாணங்களில் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்திருந்ததுடன்

முதலாம் இடத்தை   கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியும், இரண்டாம் இடத்தை மேல் மாகாணம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியும், மூன்றாம் இடத்தை – மத்திய மாகாணம் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த கிழக்கு தமிழ் சமூகத்தினருக்கும் பெருமையை தேடிதந்த ‘பாதரட்சை’ எனும் குறித்த இலக்கிய நாடகத்தில் சௌமியா, கிஷானி, டக்ஷிஜா, அந்தூரியா, பிரித்திகா, திதிக்ஷா, லோக நிவாஷினி, ரொஷானா, அக்ஷயா, விஷானி சாரா, டிலுக்ஷிகா, ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் இந்த நாடகத்தை கல்லூரியின் நாடக ஆசிரியர் திருமதி.ரம்யா  நெறியாள்கை செய்ததுடன், ஆசிரியர்களான திருமதி.பாரதி, திரு. ஜேயானந்த், மாணவி பியுலா ஜெனுஷா, அந்தூரியா ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

மேலும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கிய மாணவி சதுர்க்காவும், அத்தோடு இந்நாடகத்தினை திறம்பட வழிநடத்திய இசைக் கல்லூரி விரிவுரையாளர்களான திரு.அற்புதன் மற்றும் திரு.மோகனதாஸ்  அவர்களின் உழைப்பை கொடுத்துள்ளனர்.

மேலும், வின்சன்ட் பாடசாலையில் இருந்து தனிநடன போட்டியில் பங்குபற்றிய செல்வி. ஷாருண்யாவும் தன்னுடைய திறமையை வெளிபடுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தினையும், விவாதப் போட்டியில் பாருணி, ஹர்ஷிகா, கிருதி ஆகிய மாணவிகள் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கல பதக்கத்தினையும் பெற்று மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்து பக்க பலமாக இருந்த கல்லூரியின் முதல்வர் திருமதி. தவத்திருமகள் உதயகுமார், உப அதிபர்களான திருமதி. ருக்ஷி மற்றும் திரு.தவராஜா, பகுதி தலைவர்கள் தமிழ் மொழி தின போட்டி பொறுப்பாசிரியர் திருமதி.திஷாந்தி பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.