-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-கம்பகொட்ட பகுதியில் மாட்டை திருடி நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சிக்குளம்-ஜின்னாநகர் வயல் பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திருட்டுத்தனமாக கொண்டு சென்று மாட்டின் கொம்புகளை வெட்டி, வெள்ளை நிறத்தில் காணப்பட்ட மாட்டுக்கு நிறம் பூசி பராமரித்து வந்த நிலையில் மாட்டு உரிமையாளர் தன்னுடைய மாட்டை காணவில்லை என மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக காணாமல் போன மாட்டை தேடி மாட்டு உரிமையாளர் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்ற போது நபரொருவர் மாடு வாங்கி வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த மாட்டை பார்வையிட்டபோது மாட்டின் இரு கொம்புகளும் வெட்டப்பட்ட நிலையில் மாட்டிற்கு நிறம் பூசப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
இதே வேளை மாட்டு உரிமையாளர் மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்திய போது மாட்டை பராமரித்து வந்தவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது மாட்டை திருடி நிறம் பூசி வளர்த்து வந்தமை தெரிய வந்துள்ளது.
அதே நேரம் குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ, கம்பகொட்ட-பகுதியில் வசித்து வரும் ஏ.எம்.மதுசங்க பண்டார (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

