
ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது
ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது, என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரசாங்க அலுவலக அதிகாரிகள் அணியும் ஆடைகள் போல அவர்கள் விரும்பியவாறு அணியும் வண்ணம் இருப்பது போன்று, பாரம்பரியமாக தங்களது உடைகளுடன் ஆசிரியர்கள் தமது பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர்களுக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம் ஆடைகள் அணிய வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் சங்கம் முன் வைத்திருந்தது.
நிச்சயமாக இது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆசிரியர்களுக்கான இந்த பாரம்பரிய ஆடைகளில் கடைசி வரையும் நான் மாற்றங்களை கொண்டு வரப்போவதில்லை என்று அடித்துக் கூறியிருப்பது நிச்சயமாக இந்து மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
அதாவது இந்த பாரம்பரிய உடையானது ஆசிரியர்களுக்கு ஒரு தனித்துவமான கௌரவத்தையும் அதேபோன்று மாணவர்களுக்கு ஒரு தலைமைத்துவ உணர்வையும் அது எடுத்துக்காட்டுகின்றது.
அதே வேளையில் ஒவ்வொரு மத ரீதியான பாடசாலைகள் உள்ளன. அவர்கள் தங்கள் தங்கள் மதங்களைச் சார்ந்த பாடசாலைகளில் அவர்களது மதம்? சார்ந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய அத்தகைய ஆடைகளை அணிந்து செல்கின்றார்கள்.
எனவே யாரும் விரும்பிய ஆடைகளை அணியலாம் என்றால் அது சிலவேளை இத்தகைய மத ரீதியாக இயங்கும் பாடசாலைகளுக்கு கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இது ஒரு இன விரிசலை ஏற்படுத்தக் கூடியவாறு இருக்கும்.
எனவே ஒரு கண்ணியமான பாரம்பரியமிக்க குறிப்பாக மத விழுமியங்களைச் சார்ந்த இந்த ஆடைகளை அணிந்து ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது அது தொடர வேண்டும்.
இவ்வாறு கல்விய அமைச்சரினால் தெரிவிக்கப்பட்ட ஆணித்தனமான கூற்றுக்கு இந்து மக்களும் பக்க பலமாக இருப்பார்கள் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
