
இடமாற்றம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
-திருகோணமலை நிருபர்-
அதிகஷ்ட பாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய போதிலும் இடமாற்றம் வழங்கப்படாமையை கண்டித்து, நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2023 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்பபடிவம் கடந்த 2022ம் ஆண்டு ஏழாம் மாதம் 31ம் ஐந்து வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு இடம் மாற்றம் வழங்குவதாக கூறி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இருந்த போதிலும் தற்போது ஆறு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வருகை தந்து தமது அதிர்ஷ்ட பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதி கஷ்ட பாடசாலைகளில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த இடமாற்றத்தை, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தடுத்து நிறுத்தியமை மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஐந்து வருடங்கள் அதி கஷ்ட பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாட்டத்தை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரிடத்தில் வினவிய போது, இன்னும் இட மாற்றங்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை எனவும், தற்போது தரவுகள் மாத்திரம் பெறப்பட்டு வருவதாகவும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தவறான முறையில் எவரோ வழங்கிய தகவலின் அடிப்படையில் தேவையற்ற விதத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
