தமது காணியை பாதிரியாருக்கு தாரைவாக்க அரச அதிபர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடுவில் உள்ள எமது பாரம்பரிய விவசாயக் காணியை பாதிரியாருக்கு வழங்குவதற்கு முயற்சி செய்வதாக மாடு பிரதேச விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.

யாழ்ப்பாணம்-ஆனைப்பந்தி வீதியில் அமைந்துள்ள வட மாகாண விவசாய அமைச்சின் தலைமை அலுவலகத்துக்கு முன் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் விவசாயம் செய்து வருகிறோம்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை பாதிரியார் ஒருவர் தமக்குரிய காணி என எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் கூட்டத் தீர்மானம் எனக் கூறி அபகரிக்க முயலுகிறார்.

ஒரு தவறான தொடர்பில் அப்போதைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்த பி.எச்.எம்.சாள்சிடம் முறைப்பாடு செய்தோம். அதன் பயனாக குறித்த காணியில் ஒரு ஏக்கரை விவசாயம் செய்வதற்கு வழங்குவதோடு, குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயம் செய்ய ஆர்வமுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குமாறு சிபாரிசு செய்தார் .

ஆனால் ஆளுநர் வழங்கிய பணிப்புரையை அரச அதிபர் நடைமுறைப்படுத்தாது புறந்தள்ளி வருகிறார்.

குறித்த காணி சுமார் 70 ஏக்கர் வரை காணப்படுகின்ற நிலையில் சுமார் 58 ஏக்கர் வரை சுமார் 40குடும்பங்களுக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம்.

காணிப் பிணக்குகளை தீர்ப்பதாக எம்மை அழைத்த மன்னார் அரச அதிபர் குறித்த காணிக்கு உரிமை கொண்டாடும் பாதிரியாரையும் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் நாம் விவசாயம் செய்து வரும் காணியை ஒரு குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் வீதம் பகிந்த தாருங்கள் அல்லது ஆளுநர் வழங்கிய பணிபுரையை நிறைவேற்றுங்கள் எனக் கூறினோம் அவர் அவ்வாறு செய்யவில்லை.

எமக்கு முன்னால் பாதிரியாரை கேட்கிறார் இவர்களுக்கு இரண்டு ஏக்கர் கொடுப்பமா என பாதிரியார் மறுக்க அவர் அவ்வாறு செய்ய முடியாது என எங்களுக்கு கூறினார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருமா பாதிரியாரும் நெருங்கிய உறவினர்களாக காணப்படும் நிலையில் நாம் காலாகாலமாக விவசாய செய்து வந்த காணிகளை பறித்து பாதிரியாருக்கு வழங்க பார்க்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது .

நானும் கிறிஸ்தவனாக காணப்படுகின்ற நிலையில் ஆசியாவிலேயே செல்வம் கொழிக்கும் தேவாலயமாக மடு தேவாலயம் காணப்படுகிறது.

மடு தேவாலயத்திற்கு சொந்தமாக 300க்கும் மேற்பட்ட வீடுகளும் காணிகளும் உள்ள நிலையில் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்யும் காணியை தமக்குத் தர வேண்டும் என கேட்பது நியாயம் அல்ல.

நாங்களும் மடு ஆலயத்துக்கு செல்கிறோம் காணிக்கை வழங்குகிறோம் நாங்கள் நல்லா இருந்தால் இறைவனுக்கு இன்னும் அள்ளிக் கொடுப்போம்.

இறைவனின் பெயரைப் பயன்படுத்தி எமது வாழ்வாதாரக்காணியை கேட்பதை வழங்க முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விடையம் தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் விவசாயம் செய்யும் பத்து பேருக்கே காணிகள் இல்லை நாம் 27 பேருக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் கேட்ட நிலையில் அவர்கள் சம்மதிக்கவில்லை என தெரிவித்தார்.