பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்

மாத்தறை திஹகொட,   பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினால் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவொன்றை சோதனையிடச் சென்ற போது, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் முதலில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காலி-கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் மாத்தறை திஹகொட பொலிஸாருக்கு அருகில் வந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, நேற்று இரவு திஹகொட பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது பிரதேசவாசிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவும் அவ்விடத்திற்கு வந்ததையடுத்து, அவர் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி : பொலிஸ் நிலையத்தில் பதற்றம் : 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம்