மட்டக்களப்பில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி சில மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஓரு மீனவர் காணாமல்போயுள்ளார்.

நேற்று மாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது.

இந்த நிலையில் நேற்று மாலை முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் கரையோரம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது சில மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஒரு மீனவர் காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன மீனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உம்முனி விஜயகுமார் (54 வயது) என மீனவர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போன மீனவரை தேடும் பணிகள் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடல்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ஆற்றுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.