கிராம மட்டத்தில் இலவச வைத்திய பரிசோதனை
-திருகோணமலை நிருபர் –
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கு சென்று இலவச வைத்திய பரிசோதனையை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையை அண்மித்த ரொட்டவெவ-நொச்சிக்குளம், சாந்திபுரம் எத்தாபெந்திவெவ- தெவனிபியவர போன்ற கிராமங்களுக்கு சென்று இரத்தம் சிறுநீரகம் மற்றும் இதர நோய்களை பரிசோதனை செய்து அந்நோயாளர்களின் நலன் கருதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை இவ்வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி துலான் பெரேரா,லசித் திலகரட்ண மற்றும் அதீஸ ஆகிய மூவர் அடங்கிய வைத்தியர்கள் தமது இலவச சேவையை ஆரம்பித்துள்ளனர்.
இதனூடாக பல நோயாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனைகளின் மூலம் பல நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த நோய்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் நலன் கருதி கிராம மட்டங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது.
இருந்தபோதிலும் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
