மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையில், ​​இன்றும் நாளையும் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.