மட்டு.வாழைச்சேனையில் கோடாரியால் தாக்கி ஒருவர் படுகாயம்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாழைச்சேனை சந்தைப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் குறித்த நகைக்கடை உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாங்கேணி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்படி நகைக்கடையில் இரு தங்க நகைகளை வேறாக அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

அதில் ஒரு நகையினை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக கிடைக்கும் பணத்தினை செலுத்தி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மீதியாக செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தியபின்னர் நகையினை கையளிக்குமாறு கேட்டபோது நகைக்கடை உரிமையாளர் திரும்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி, பின்னர் கைக்கோடாரியால் நகைக்கடை உரிமையாளர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாக ஆரம்பட்ட கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார்.

பொலிஸார் இன்று சந்தேக நபரை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டு.வாழைச்சேனையில் கோடாரியால் தாக்கி ஒருவர் படுகாயம்
மட்டு.வாழைச்சேனையில் கோடாரியால் தாக்கி ஒருவர் படுகாயம்