சந்தேகநபர் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட்டம்

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது,  அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து, 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் I Phone ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நேற்று சனிக்கழமை நண்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருந்த நிலையில், அவர் நேற்று முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்.

மலசல கூடத்தின் ஜன்னல் இடைவெளி ஊடாக அவர் வெளியேறி தப்பித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர், என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.