மலையக மக்கள் அனைவரும் எங்கள் குடும்பம் – செந்தில் தொண்டமான்
மலையக மக்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களே எனவே அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவ்விடத்தில் நாங்கள் நிற்போம். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இறந்தால் அவரது பூத உடலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைக்க முடியும் என்றால் ஏன் இதே தொழிற்சாலையில் தொழில் செய்து கடமை நேரத்தில் உயிரிழந்த குறித்த இளைஞரின் பூத உடலை தொழிற்சாலையில் வைக்க முடியாது? என கேள்வி எழுப்பினார் முன்னாள் ஊவா மாகாண சபை அமைச்சரும் தற்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான்.
கடந்த 9 ம் திகதி நமுனுகுலை கனவரல்ல ஈ.ஜீ.கே தோட்டத்தில் தொழிற்சாலை கடமை நேரத்தில் தொழிற்சாலை உயர் அதிகாரியின் பணிப்புரைக்கு அமைய குறித்த அதிகாரியின் வீட்டுக்கு நீர்க்குழாய் திருத்தச் சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த 25 வயதுடைய த.கணேசமூர்த்தியின் பூத உடல் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய ஈ.ஜீ.கே தோட்ட தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மரண சடங்கில் அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொண்ட போதே மக்கள் முன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
” மலையகத்தில் சில பேர் இருக்கின்றார்கள் கம்பனிகாரர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு கம்பனிக்காரர்களுக்கு தொழில் செய்பவர்கள் நாம் அவ்வாறு எம் மலையக மக்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். முதலில் தோட்டக் கம்பனிகள் தெரிவித்தார்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 15000 ரூபாய் தருவதாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை பின்னர் 10 லட்சம் அதனையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை தற்போது 15 லட்சம் தருகிறேன் என்கிறார்கள்.
நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றேன். இறந்த இளைஞருக்கு 25 வயது இன்னும் 30 வருடம் வேலை செய்தால் ஒரு மாதத்திற்கு 25000 ரூபாய் வீதம் 30 வருடங்களுக்கு 90 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். எனவே இறந்தவரின் வீட்டுக்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபாய் தோட்ட கம்பெனிகள் கொடுக்காவிட்டால் குறித்த தோட்ட கம்பனிக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனவே நான் குறித்த இறந்த இளைஞரின் வீட்டுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பேன்” என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமையவே நேற்று இரவு முதல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குறித்த இளைஞரின் பூத உடல் ஈ.ஜீ.கே தொழிற்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
