மாணவர் ஒன்றியம் அச்சுறுத்தல் விடுத்ததாக பீடாதிபதி குற்றச்சாட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆதரவுடைய மாணவர்கள் குழுவினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்கள், பீடாதிபதிகள் மற்றும் உபவேந்தர் ஆகியோரை மாணவர் ஒன்றியத்தின் தலைவர், கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கலாநிதி ஏகநாயக்க குற்றம் சுமத்தினார்.

ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம், நீங்கள் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல என்று மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்னை அச்சுறுத்தினார்.

பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் எனத் தெரிவித்த கலாநிதி ஏகநாயக்க, பல்கலைக்கழகம் இவ்வாறானதொரு பாரதூரமான மற்றும் துயரமான நிலையில் இருப்பது வருந்தத்தக்கது என தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலைப் பீடத்தின் சட்ட பிரிவின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்த பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் தீர்மானித்ததை அடுத்து இந்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

பகிடிவதை எதிர்த்ததற்காக, கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, செப்டம்பரில் சட்டப் பட்டதாரிகளின் குழுவைத் தாக்கியது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கையைத் தூண்டியது.

சட்டத் பிரிவை சேர்ந்த மாணவர்களில் ஒரு பிரிவினரின் தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துவதற்கு மாணவர் ஒன்றியம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை கலைப் பீடத்தின் சட்ட பிரிவின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பௌதீக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் விரிவுரைகளும் தற்போது மாணவர் ஒன்றியத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை எதிர்பார்த்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.