பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்

-கல்முனை நிருபர்-

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் திருக்கதவு திறத்தல் பூர்வாங்க கிரியைகள், ஊர்க்காவல் பண்ணல், கடல் குளித்தல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகியுள்ளது.

மகாபாரத இதிகாசத்துடன் தொடர்புடைய கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 2022-09-20 ஆம் திகதி பூர்வாங்க கிரியைகள், ஊர்க்காவல் பண்ணல், கடல் குளித்தல் கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகியுள்ளது.

மகாபாரத போரை நினைவு கூறும் முகமாக தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் முக்கிய நிகழ்வுகளாக எதிர்வரும் 22 ஆம் திகதி மகாபாரத இதிகாச ஏடு திறத்தல், 26 ஆம் திகதி ஸ்ரீ கிருஷ்ணர் துவாரக புரியிலிருந்து அத்தினாபுரத்திற்கு செல்லும் சுவாமி எழுந்தருளப்பண்ணல் 27 ஆம் திகதி அதிகாலை நாட்கால் வெட்டுதல், ஒக்டோபர் முதலாம் திகதி ,கல்யாணக்கால் வெட்டுதல், 05 ஆம் திகதி கிருஷ்ணர், பாண்டவர்கள், திரௌபதை தேவாதிகள் சகிதம் வனவாசம் செல்லுதல், 06 ஆம் திகதி அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை செல்லுதல், அரவாணைகளப்பலி கொடுத்தல், 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீப்பள்ளயத்தின் சிகரம் என போற்றப்படும் தீமிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது. மறுநாள் 08 ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளயம், தருமருக்கு முடிசூட்டுதல் தீக்குழிக்கு பால்வார்க்கும் நிகழ்வு இடம்பெற்று அன்று இரவு 7 மணிக்கு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திரௌபதை அம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அம்மன் முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி ஊர்வலம செல்லும் நிகழ்வுவுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.