
போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
-கல்முனை நிருபர்-
இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு சேவையை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரினால் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள், வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது
இதற்கமைய இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயற்திட்டம் பாடசாலை அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சீ.ஐ.மஜித் குற்றவியல் பொரிப்பதிகாரி, வீதி போக்குவரத்து அதிகாரி எஸ்.ஐ.ஆனந்த, சிறுவர் குழுவிற்கு பொறுப்பான உத்தியோகத்தர் பாலகிஷ்னண் ரூபினி பாடசாலையின் பிரதி அதிபர் ஜெயந்தன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனார்.
இங்கு மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதரும் போது வீதியோரங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மாணவர்கள் அவதானமாகவும், விழிப்புடனும் செயற்பட வேண்டும்.
அத்துடன் வீதிகளில் நின்று பகிடி வதைகளில் ஈடுபடும் நபர்கள் போன்றோரையும் மாணவர்கள் அச்சமின்றி பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் அப்போது அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.
மேலும், மாணவர்கள் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பெற்றோருடன் வரும்போது தலைக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.
அக்கரைப்பற்று பகுதியில் மட்டும் இவ்வருடம் வீதி விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் தலைக்கவசம் இல்லாது பயணித்த 925 நபர்களுக்கு. எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


