
அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நபர் வீட்டின் 7 வயது சிறுவனுக்கு செய்த கொடூர செயல்
அலைபேசிக்கு மீள்நிரப்பும் அட்டை வாங்க கடைக்கு சென்ற 7 வயது சிறுவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய குறித்த சிறுவன், பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கந்தகெட்டிய- களுகஹகதுர என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தை தெரிவிக்கையில்,
“நான் எனது பிள்ளையின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து மீள் நிரப்பும் அட்டையை கொள்வனவு செய்து வருமாறு கூறினேன்
கடைக்குச் செல்லும் வீதி மிகவும் சிறியது. இரண்டு புறங்களிலும் காடுகள் உள்ளது. மகன் கடைக்குச் சென்று 5 நிமிடங்களில் சத்தமிட்டார். நாங்கள் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா என பயந்து ஓடினோம்.
அப்போது எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஒருவர் அங்கிருந்து ஓடியதை அவதானித்தோம்.
எனது மகன் கடைக்குச் செல்லும் முன்னர் அந்த நபர் எமது வீட்டிற்கு வந்தார் அப்போது அவரை தேநீர் அருந்துமாறு கூறினோம் ஆனால் அவர் வேண்டாம் என மறுத்து விட்டு வெற்றிலை போட்டார்”, என தெரிவித்துள்ளார்.
51 வயதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் ஐவர் அடங்கிய குழுவொன்று சத்திரசிகிச்சையை முன்னெடுத்துள்ளதுடன், சிறுவன் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
