
நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதுடன், ஜூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதியும் அதில் இணைந்துகொண்டார்.
இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சில மேலதிக தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மின் கட்டணத் திருத்தம் மற்றும் பிற நிதித் தரவுகள் உள்ளிட்ட வேறு சில நிதித் தரவுகளை நிதி நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி நிதியத்துடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பான கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கடன் கோரும் நாட்டிற்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
