கொலை செய்து விட்டு நாட்டைவிட்டு தப்பிச்சென்றவர் மூன்று வருடங்களின் பின் கைது

அம்பலாங்கொடை-ரத்கமவில் வசித்து வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை, கடந்த 10ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2019 ஆகஸ்ட் 3 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவராவார்.

கொலையின் பின்னர் டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேக நபர் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் படுகொலை விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கடந்த 11ஆம் திகதி பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.