இன்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைப்பு

அரிசி, பருப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும்இ அரிசி உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.

கடந்த மாத இறுதியில் இருந்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்று திங்கட்கிழமையும் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் பருப்பு ஒரு கிலோகிராம் மொத்த விற்பனை விலை 430 முதல் 450 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் மொத்த விலை 170 முதல் 190 ரூபாய் வரையில் உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 160 மற்றும் 165 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 முதல் 150 ரூபா வரையிலும்இ இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் மொத்த விலை 1350 முதல் 1500 ரூபா வரையிலும் உள்ளது.

இருப்பினும், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை அதிகமாக உள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களினால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் முட்டை விலையும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோருக்கு அந்த நன்மை கிடைக்கவில்லை என, உணவக உரிமையாளர்கள் சங்கம், நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளது.