ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான பிரதம வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், பொரளை புனித லூக்கா தேவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு ஃபைஸர் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.