இரு இளைஞர்கள் கடத்தல் : சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் கைது
-பதுளை நிருபர்-
பதுளையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் காண்ஸ்டபிள் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
பதுளை பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று புதன்கிழமை மாலை இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு, இவர்களிடமிருந்த பணம் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடினையடுத்து பதுளை தலைமை பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்த இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பதுளையைச் சேர்ந்தவர்களான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றும் ஒருவரும் பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் குருணாகலை பொலிஸ் பிரிவில் பயிற்சி கான்ஸ்டபிளாக பணி புரிந்ததோடு , 2021.12.30 அன்று விடுமுறையில் வீடு சென்றவர் மீண்டும் கடமைக்கு திரும்பவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஒரு ஜோடி கைவிலங்கும், 4 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று வியாழக்கிழமை தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
