நாடு முழுவதும் மழையுடனான வானிலை
தென்மேற்கு பருவக்காற்று நிலைமைகள் செயற்படுவதனால், நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.
அதேவேளை, வடக்கு, வடமத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
