கோட்டாயப ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு  அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய  ராஜபக்ஷ  இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவது, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும், அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையிலேயே அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை, என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன். நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறேன்.

இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.