
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய, சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, அமைதிவழிப் போராட்டக்காரர் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அமைதிவழிப் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு இலங்கை அரசை கோறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பியதுடன், தடுத்து வைக்கபட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்குமாறு அரசை வேண்டுவதுடன், இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் (அரகலய) மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.
முழு நாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தது. எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகாரமாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள், அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரலையே நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான, ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லுமென நாம் அஞ்சுகிறோம்.
எனவே, மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள மீறுவதை உடன் நிறுத்துமாறும், ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசைக் கோருகிறோம்.
என குறிப்பிடப்பட்ட அறிக்கையொன்றினை அங்கு வருகைதந்திருந்த மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பெருமளவிலானோர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
