கரடி தாக்குதலுக்குள்ளானவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பெரிய உட்பட்ட மல்போறுவ பகுதியில் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வீட்டுக்குப் பின்னால் விறகு எடுப்பதற்காக சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான டி.சுமதிபாலா (65 வயது) என்பவர் முகத்தில் காயத்துடன் கண் பகுதியில் பாரிய காயத்துடனும் கோமரங்கடவல பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவரின் கண்ணில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதால் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த கண்டி போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஹசொறுவெவ பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் யான்ஓயா திட்டத்தின் ஊடாக பாரிய நீர் தேக்கமான யான்ஓயா நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதால் புதிதாக அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு புதிய வீடுகள் அரசினால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
ஆனாலும் அதிக காடுகள் சூழ்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் யானைகள் மற்றும் கரடிகள் கிராமத்துக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் மூவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
