கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை அவர் விரைவில் நாடு திரும்புவார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும், அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அவர் இலங்கை திரும்பவுள்ளதாக வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளிக்கையில்,

இங்கு முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ வீசா பெற்று சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், சில தகவல்கள் கூறுவது போல் இது எந்த வகையிலும் தஞ்சம் அடையும் பயணமல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் பயணத் திட்டம் அல்லது அவர் நாடு திரும்புவதற்கான சரியான திகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.