
QR நடைமுறை வேண்டாம், எரிபொருள் அட்டை முறையே வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் அட்டை நடை முறையின் படி எரிபொருள் இதுவரை பெற்றிராத கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரதேச செயலகங்களுடன் இணைந்து எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருந்த துடன் கடற்படை மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் 25 திகதி முதல் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள QR கோட் நடைமுறை வேண்டாம் எனவும், தற்போது மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் அட்டை மூலம் எரிபொருள் விநியோகமே எரிபொருள் பதுக்கலை தடுக்க சிறந்தது.
QR கோட் மூலம் விநியோகித்தால் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மக்கள் தொகை குறைந்த மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வழி ஏற்படும் எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கினால் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டி வரும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் அனேகமானவர்கள் ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் இணையத்தின் ஊடாக பதிவு செய்யவும் சிரமப்படுவதாகவும், எனவே கிராம ரீதியாக எரிபொருள் அட்டையின் படி எரிபொருளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
