
இன்று பதவி விலகல் அறிவிப்பும், பதவி பிரமாணமும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு தமக்குக் கிடைத்த ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின் சட்டபூர்வமான தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தற்போது கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இறுதித் தீர்மானம் இன்று காலை சபாநாயகரிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தற்போது பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று காலை புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், நேற்று ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சமூக ஊடகங்களில் பரவிய உத்தியோகபூர்வ ராஜினாமா அறிவிப்பு பொய்யானது என்றும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
